அரசியல்வாதிகளின் பேச்சுக்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள், பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முகாந்திரம் இல்லை எனவும் இந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகவும் வாதிட்டனர்.
இதனைக் கேட்ட நீதிபதி வேல்முருகன், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனக் காட்டமாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, ஒரு வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணையே சம்பவம் நடந்ததா இல்லையா என்பதுதான் எனவும் ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணைக்கே முகாந்திரம் இல்லை எனத் தெரிவிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எதிரான வழக்கு என்றால் விசாரணைக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறும் அரசு தரப்பு, வேண்டாதவர்களுக்கான வழக்கு என்றால் விசாரணைக்கு உகந்தது என்று தெரிவிக்கிறீர்கள் அது ஏன்? என அரசு தரப்பை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார்.
இறுதியாக வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்ததாகப் பிறப்பித்த உத்தரவு குறித்து புகார்தாரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அதைச் செய்யத் தவறினால் வழக்கைத் தீவிரமாகக் கருத முடியும் எனவும் ஆணையிட்டார்.
தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.