நெல்லையில் வெகு விமர்சையாக நடைபெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் ஆனி பெருந்திருவிழா ஜூன் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் தனித் தனி தேர்களில் எழுந்தருளிய நிலையில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடி “ஓம் நமசிவாயா” என பக்தி முழக்கமிட்டபடி தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
காலை 8.40 மணியளவில் தேரோட்டம் தொடங்கிய நிலையில் 14 மணி நேரத்திற்கு பின் இரவு 10.50 மணியளவில் நெல்லையப்பர் சுவாமி தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு உற்சவர் சிலை கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சுவாமியை மனமுருகி வழிபட்டனர்.