முசிறி அருகே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நடைபெற்ற வைப்பு தொகை, நகை அடகு மோசடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள தொட்டியத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வைப்பு தொகை மற்றும் அடகு வைத்த நகைகள் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அங்குள்ள பேருந்து நிலையம் அருகே இந்த மோசடியை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சிவபதி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, அண்ணாவி, பூனாட்சி, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், திமுக அரசின் பல்வேறு செயல்பாடுகளை விமர்சித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.