வளையபட்டியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீர்த்தக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, N.புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சிப்காட் அமைக்கக் கூடாது என சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால், மாநில அரசு சிப்காட் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் விவசாயிகள் தீர்த்தக் குடங்களைச் சுமந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தீர்த்தக் குடங்களைச் சுமந்து சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டாம் என அறிக்கை அளித்தும் ஆளுங்கட்சியினர் சட்டத்திற்குப் புறம்பாக நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் அமைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், விவசாயிகளுக்கு எதிராக மீண்டும் சிப்காட் அமைக்க முயற்சி மேற்கொண்டால் சட்டமன்ற தேர்தலில் திமுக கடும் தோல்வியைச் சந்திக்கும் எனக் கூறினார். .