சமூகத்தின் பார்வை காவல்துறையினர் மீது உள்ளதால் காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் எனத் தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் கோட்டையில் உள்ள 129 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பழமையான காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஏழு மாதங்களாகப் பயிற்சி பெற்ற 182 ஆயுதப்படை இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஐஜி அன்பு, காவலர்களின் அணிவகுப்பைத் திறந்த வாகனத்தில் சென்று ஏற்றுக்கொண்டார்.
அப்போது, பெண் காவலர்களின் சிலம்பம், வாள் வீச்சு மற்றும் கண்களைக் கட்டிக்கொண்டு துப்பாக்கி பாகத்தைக் கழற்றி போற்றுதல், ஒருவரின் மீது வைக்கப்பட்ட காய்கறிகளை வெட்டுதல் உள்ளிட்ட சாகசங்களைக் கண்டு ரசித்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு, வீட்டில் கரப்பான் பூச்சியைப் பார்த்துப் பயந்த நமது பெண் பிள்ளைகள், துப்பாக்கியைப் பிடித்து பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார்.
22 பேருடன் ஆரம்பித்த பெண்கள் காவல் படையில், தற்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாகக் கூறினார். காவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை நாள்தோறும் செய்திகளில் பார்ப்பதாகக் கூறிய அவர், காவல்துறையினருக்குக் கனிவு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களின் உற்ற நண்பனாக காவல்துறை இருக்க வேண்டும் என ஐஜி அன்பு கேட்டுக் கொண்டார்.