இந்தியாவின் லட்சிய மின்னணு கூறு உற்பத்தித் திட்டத்துக்கான காலக்கெடு நெருங்கிவருவதால் நாட்டின் மின்னணுத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. சீனாவை விட்டு விலகி முன்னணி இந்திய ஒப்பந்த நிறுவனங்கள் தென் கொரியா, தைவான் மற்றும் ஜப்பான் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலக சந்தையில் ஒரு பெரிய சக்தியாக மாறும் நோக்கத்துடன், இந்தியா தனது மின்னணு உற்பத்தித் துறையை விரிவுபடுத்தக் கடுமையாக உழைத்து வருகிறது. குறிப்பாக SEMI CONDUCTOR CHIP-கள் மற்றும் மின்னணு கூறுகள் துறையில் வேகமான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.
உலகளாவிய தொழில்நுட்பத் துறையில்,வெறும் நுகர்வோராக மட்டும் இல்லாமல் உற்பத்தியாளராகவும் வளரும் நோக்கத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே,செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் முதல் வாகன மின்னணு உதிரிப் பாகங்கள் வரையிலும், தொலைத்தொடர்பு உபகரணங்கள் தொடங்கி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரையிலும் இந்தியாவில் வடிவமைக்கப்படுகிறது.
மின்னணு சாதனங்களுக்கான பாகங்கள் வெளிநாட்டிலிருந்து வரவழைத்து இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், நாட்டின் மின்னணு நிலப்பரப்பை மறுவடிவமைக்கும் புதிய நடவடிக்கையை, மத்திய அரசு எடுத்தது. உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்தில் மின்னணு துறைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நாட்டின் லட்சிய மின்னணு கூறு உற்பத்தித் திட்டத்தையும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்தது. இதற்கு 22,919 கோடி ரூபாய் நிதியுதவி மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளது. 59,350 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கவும், சுமார் இலட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி வேலைகளை உருவாக்கவும், கூடுதல் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த செயல்திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கை உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஈர்த்து, மின்னணு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற தேசமாக மற்றும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில், மின்னணுப் பொருட்களின் உற்பத்தி கடந்த 11 ஆண்டுகளில் 5 மடங்காக வளர்ந்து சுமார் 11 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதியும் 6 மடங்கு வளர்ந்துள்ளது. கூடுதலாக, ஒட்டு மொத்தமாக இந்த துறையில் 25 லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், மின்னணு கூறு உற்பத்தி திட்டம், இந்தியாவின் மின்னணு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சீனா மீதான அமெரிக்காவின் வர்த்தகப் போர், ஆகியவை இந்தியாவுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளன.
2020 இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பின், சீன முதலீடுகளுக்கு பல்வேறு அமைச்சகங்களில் அனுமதியைக் கட்டாயப்படுத்தியுள்ளது மத்திய அரசு. மின்னணு கூறுகளுக்கு முக்கியமான அரிய பூமி காந்தங்களையும் தனிமங்களையும் ஏற்றுமதி செய்யச் சீன அரசும் பல்வேறு புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதனால், சீனாவில் பாகங்களைத் தனித் தனியே உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகளால், இந்திய மின்னணு பொருட்கள் உற்பத்தியாளர்கள் ,சீனாவில் இருந்து விலகி வேறு நாடுகளுக்குச் செல்ல முடிவு எடுத்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய ஏர் கண்டிஷனர் ஒப்பந்த உற்பத்தியாளரான ஆம்பர் எண்டர்பிரைசஸ், கொரியா சர்க்யூட்டுடன் இணைந்து, 3000 கோடி ரூபாய் மதிப்புக்கு செமிகண்டக்டர் மூலக்கூறு உற்பத்தி, மற்றும் 1000 கோடி ரூபாய் மதிப்பில் PCB உற்பத்தி என மொத்தம் 4,000 கோடி ரூபாய்க்கான கூட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது.
டிக்சன் டெக்னாலஜிஸ், Epack Durable, மைக்ரோமேக்ஸ் மற்றும் PG எலக்ட்ரோபிளாஸ்டின் நிறுவனங்களும்,தைவான் மற்றும் கொரிய நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 5 திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதிக அளவு, குறைந்த விலை என மின்னணு கூறு உற்பத்தியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் சீனா தள்ளாடத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் கொள்கைகள் மற்றும் தொழில்துறை திட்டங்கள் உற்பத்தியாளர்களுக்குத் தன்னம்பிக்கையும், நடுநிலையான விநியோகச் சங்கிலியையும் உருவாக்க உதவுகின்றன.
ஒருகாலத்தில், அடிப்படை மின்னணு சாதனங்களுக்குக் கூட இறக்குமதியை நம்பியிருந்த ஒரு நாட்டுக்கு இது ஒரு அற்புதமான தருணம். மின்னணு தொழில் துறை வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல். மின்னணு கூறுகள் உற்பத்தி திட்டம் வெறும் படமல்ல. மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான வரைபடம்.
ஸ்மார்ட்போன் தொடங்கி எலெக்ட்ரானிக் கார் வரைக்கும் அந்தந்த மின்னணு பொருட்களின் உள்ளே உள்ள சிப் போன்றவற்றை யார் கட்டுப் படுத்துகிறாரோ அவருக்கே இனி வருங்காலம் சொந்தமாகும். உலகின் எதிர்காலத்தையே சொந்தமாக்க இந்தியா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.