தமிழக அரசின் மின்கட்டண உயர்வால் கயிறு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணத்தால் தொழில்முனைவோர்களும், தொழிலாளர்களும் சந்திக்கும் சிரமங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தில் சேலம், பொள்ளாச்சி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கயிறு உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்த ஆலைகளில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஆங்காங்கே வீடுகளிலும் கயிறு உற்பத்தி செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கயிற்றின் விலை ஆண்டுக்கு ஆண்டு சரிந்துவரும் நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்திய மின்கட்டண உயர்வு கயிறு உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
கயிறு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தென்னை மட்டையின் விலை கடந்தாண்டு 20 பைசாவிற்கு விற்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 2 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தேங்காய் மற்றும் தென்னை மட்டையின் விலை அடுத்தடுத்து உயரும் நிலையில், அதன் மூலம் தயாரிக்கப்படும் கயிற்றின் விலையோ 40 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகச் சரிந்துள்ளது.
தொடர் நஷ்டத்தால் ஏராளாமான கயிறு உற்பத்தி நிறுவனங்கள் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள நிறுவனங்களையும் மொத்தமாக மூடும் அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் ஏராளமான சிறு,குறு தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கேள்விக்குறியாகியுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்து பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டிய தமிழக அரசே, மின் கட்டணத்தை உயர்த்தி அத்தொழிலை அடியோடு முடக்கப்பார்ப்பதற்கு ஒட்டுமொத்த தொழில்துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்