தமிழக முதலமைச்சரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் முறையாகக் குடிநீர் வருவதில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 50 முக்கியமான இடங்களில் 6 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டணமில்லா திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களைக் கடந்த ஜூன் 18ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே பல்வேறு இடங்களில் குடிநீர் முறையாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் காலை முதலே குடிநீர் வரவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இலவச குடிநீர் திட்டம் என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தில் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்ததாகவும், பின்னாளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் முறையாக வரவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் இயந்திரத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதாகக் குடிநீர் வாரியத்திடம் 2 தினங்களுக்கு முன்பு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் இதுவரை தண்ணீர் வரவில்லை எனவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.