கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரயில்வே கேட்டை மூடாமல் பணியில் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை இருப்புப் பாதை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிதம்பரம் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, ரயில்வே கேட்டின் இருபுறமும் அதிகமான வாகனங்கள் நின்றதால் கேட்டை திறந்துவிட்டதாகக் கேட் கீப்பர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.