நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் வியாழக்கிழமை நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 5ஆவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ராயபுரம் உட்படப் பிற மண்டலங்களில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அத்தொகையை அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என அவர் நினைக்கிறாரா? எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.