தாமிரத்துக்கு 50 சதவீத வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,மருந்து பொருட்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பால், இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபரான ட்ரம்ப், உலக நாடுகளுக்குப் பரஸ்பர வரிகளை விதித்தார். குறிப்பாக, இந்தியப் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார்.
மேலும், கடந்த ஜூலை 9 ஆம் தேதி வரை புதிய பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். ஆனாலும், அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத வரி தொடரும் என்று உத்தரவிட்டிருந்தார்.
காலக்கெடு முடிவடையும் முன், பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய முயற்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில், பரஸ்பர வரிக்கான காலக்கெடுவை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை நீட்டித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை பிரிட்டன் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியா உட்பட சில நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்கா, இந்தியா இடையே ஒரு மினி வர்த்தக ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாடும் கூடுதலாக 10 சதவிகித வரியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இதில் எந்த விலக்கும் இருக்காது என்றும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவும் ஒரு உறுப்பினர் என்ற போதும், இதுவரை இந்தியா மீது குறிப்பிட்ட பிரிக்ஸ் தொடர்பான வரி எதுவும் விதிக்கப்படவில்லை.
இதற்கிடையே, அமெரிக்காவில் தாமிரம் மற்றும் தாமிரப் பொருட்கள் இறக்குமதிகளுக்கு, புதிதாக 50 சதவீத வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். மேலும், மருந்து பொருட்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளில் 90 சதவீதத்துக்கும் மேல் இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி ஆகிறது. பிராண்ட் பெயர் கொண்ட மருந்துகளின் மலிவான பதிப்புகளான ஜெனரிக் மருந்துகளே அமெரிக்காவில் நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன
அமெரிக்காவில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனநல நோய்களுக்கான மருந்துகளில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளே 60 சதவீதத்துக்கும் அதிகமானவையாகும்.
இந்தியா கிட்டத்தட்ட எந்த வரியும் செலுத்தாமல், ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதேசமயம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க மருந்துகளுக்கு 10.91 சதவீத வரியை இந்தியா வசூலிக்கிறது.
கடந்த ஆண்டு 980 கோடி ரூபாய்க்கு மருந்துகளை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது முந்தைய ஆண்டின் 810 கோடி ரூபாயில் இருந்து இது 21 சதவீதம் அதிகமாகும். இது இந்தியாவின் மொத்த மருந்து துறை ஏற்றுமதியில் 40 சதவீதமாகும்.
ட்ரம்பின் மருந்து மற்றும் மருந்து பொருட்களுக்கான வரி எச்சரிக்கை வெளியான நாளில் , இந்திய மருத்துவ நிறுவனங்களின் பங்குகளின் விலை 4 சதவீதம் வரை சரிவைக் கண்டது.
இதே போல், கடந்த நிதியாண்டில், உலக அளவில் 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான தாமிரம் மற்றும் தாமிரப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இதில் அமெரிக்காவுக்கு மட்டும் 36 கோடி டாலர் மதிப்பிலான ஏற்றுமதியைச் செய்தது. சவுதி அரேபியா, சீனாவுக்கு அடுத்து, அமெரிக்காவுக்கான மூன்றாவது பெரிய தாமிரம் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வங்கதேசம்,மலேசியா,மியான்மர், லாவோஸ் தாய்லாந்து, கம்போடியா, கஜகஸ்தான், ஜப்பான், தென் கொரியா, தென்னாப்பிரிக்கா போஸ்னியா உட்பட 14 நாடுகளுக்கு வரி தொடர்பாகக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
வரி தொடர்பான இந்த கடிதங்கள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதா ?” என்று கேள்விக்குக் கிட்டத்தட்ட இறுதியானது என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு வரி தொடர்பான கடிதம் வரவில்லை என்பதால், விரைவில் இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான வர்த்தக ஒப்பந்தம் எட்டப் படும் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு முன்னதாக, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், நாட்டின் தாமிரம் மற்றும் மருந்து ஏற்றுமதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தொழில் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.