விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மதிமுகவினர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினார்.
ஆனால் அவரது உரையைக் கேட்காமல் மதிமுக தொண்டர்கள் வெளியேறிய வண்ணம் இருந்ததால் நாற்காலிகள் காலியாகி கொண்டிருந்தன. இதனை தனது கேமராவில் படம் பிடித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களை வெளியேற்றுமாறு கட்சி தொண்டர்களுக்கு ஆவேசத்துடன் வைகோ உத்தரவிட்டார்.
மேலும் கையில் உள்ள கேமராக்களை பறிமுதல் செய்யுமாறும் கூறிய வைகோ செய்தியாளர்களையும் ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகோ உத்தரவிட்டதை அடுத்து மதுபோதையில் இருந்த மதிமுக தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
மதிமுக தொண்டர்கள் தாக்கியதில் காயமடைந்த தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தவிர மேலும் இரண்டு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீதும் மதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர். செய்தியாளர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.