மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தரப்பில், இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதன் விசாரணையில் ஆஜரான அமலாக்கத்துறை தரப்பு, அசோக் குமார் அமெரிக்கா சென்றால் வழக்கு விசாரணை பாதிக்கும் என கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனை ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, அசோக்குமார் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.