சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தான் எடுத்துச் சென்ற பாசிப்பயிரையும், வெந்தயச் செடியையும் முளைக்க வைத்து பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா. விண்வெளி நிலையத்தில் சுக்லா செய்த ஆய்வுகள் குறித்தும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவின் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா உட்பட 4 வீரர்கள், கடந்த ஜூன் 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர், விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் போன்ற பெருமைகள் சுபன்ஷூ சுக்லா வசம் வந்தன.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா, விதை முளைப்பு மற்றும் செடி வளர்வதில் நுண் ஈர்ப்பு விசையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதற்காகத் தான் எடுத்துவந்த வெந்தயம், பச்சைப் பயிறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாகவும் சுபன்ஷு சுக்லா நிறைவு செய்துள்ளார். முளை விட்ட விதைகளைப் புகைப்படம் எடுத்து வைத்திருக்கும் அவர், அதனைப் பூமிக்குப் பத்திரமாகக் கொண்டுவரக் குளிர்பதன பெட்டகத்தில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத் தலைவரும், விஞ்ஞானியுமான லூசி லேவுடன் கலந்துரையாடிய சுக்லா, இந்தியாவில் உள்ள தேசிய நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களின் சார்பில் பல்வேறு சிறப்புமிக்க ஆய்வுகளை மேற்கொண்ட பணிகள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளிப்பதாகக் கூறினார்.
ஸ்டெம் செல் ஆராய்ச்சி தொடங்கி விதை முளைப்பில் நுண் ஈர்ப்பு விசையின் தாக்கம் வரை பல்வேறு பரிமாணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இடையே பாலமாக இருப்பது பெருமையளிப்பதாகவும் சுபன்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார்.
சுபன்ஷூ சுக்லாவின் மூலமாக விண்வெளியில் வளர்க்கப்பட்ட பாசிப்பயிறு மற்றும் வெந்தய செடிகளின் வளர்ச்சி நாள்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுக்லா பூமிக்குத் திரும்பும் போது அந்த செடிகளையும் கொண்டு வருவார் எனவும், கர்நாடக மாநிலம் தார்வார்ட் கொண்டு செல்லப்பட்டு அந்த செடி வளர்க்கப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதோடு, விண்வெளியில் நுண்பாசி மாதிரிகளையும் சுக்லா ஆய்வு செய்திருப்பதாகவும், வருங்காலத்தில் அவை விண்வெளியில் உணவு, எரிசக்தி மற்றும் தூய காற்றைக் கூட வழங்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தனது அனைத்துவிதமான ஆய்வுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுக்லா, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் வரும் 14 ஆம் தேதி பூமியில் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆதித்யா, சந்திரயான் என ஒட்டுமொத்த விண்வெளி உலகிற்கும் முன்னோடியாகத் திகழும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்தகட்ட திட்டங்களுக்கு சுபன்ஷு சுக்லாவின் இந்த விண்வெளிப் பயணம் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது.