யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் அவரது தாயாரிடம் மன்னிப்பு கேட்டால் முன் ஜாமீன் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த கும்பல், அவரது தாயார் கமலாவை மிரட்டிவிட்டு, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. மேலும் வீட்டுக்குள் சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை கொட்டிவிட்டுச் சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வீட்டுக்குள் சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை வீசி சென்றது அநாகரீகத்தின் உச்சம் என வேதனை தெரிவித்தார்.
வீட்டில் தனியாக இருந்த சவுக்கு சங்கரின் தாயார் இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் என்பதால் மனுதாரர்கள் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் முன்ஜாமின் வழங்குவதில் எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் கூறினார்.