லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் எனவும் இது தொடர்பாக புகார் வந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை ஏழுமலை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த மலர்விழி என்பவர் தமக்கு சொந்தமான சொத்துக்களை மோசடி செய்து சிலர் பட்டா மாறுதல் செய்துள்ளதாகவும் இதனை சரி செய்ய வருவாய்த் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஜிபே மூலம் பணம் அனுப்பியும் கூடுதல் லஞ்சம் கேட்டதால் லஞ்ச ஒழிப்பு துறையிடம் தெரிவித்ததாகவும் ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி, லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் எனவும் இது தொடர்பாக புகார் வந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
லஞ்ச ஒழிப்புத் துறையை பலப்படுத்த தமிழக அரசு 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரரின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.