தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு வாரமாக நடைபெற்ற பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி வாயிலாக பயிலும் மாணவர்களுக்காக 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்மையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், பற்றாக்குறையுள்ள அரசு கல்லூரிகளில், பல்கலைக்கழக பேராசிரியர்களை அனுப்பி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தங்களை அரசு கல்லூரிகளுக்கு சென்று பாடம் நடத்த சொல்லும் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் 35-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், கூடுதல் பணி தொடர்பான தீர்மானத்தை ஒருவாரத்திற்குள் நீக்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து, பல்லைக்கழக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.