வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போட்டு வருவதாகக் கூறியுள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்திய விவசாயிகளால் தரமான பருத்திகளை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பருத்தி உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், வளர்ந்த நாடுகளின் பருத்தி உற்பத்திக்கு நிகராக இந்தியாவை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும்போது பிற நாட்டு நூல் இழைகளை ஏன் நாட வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்திய விவசாயிகளால் தரமான பருத்திகளை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, பி.என் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் உள்ள பருத்தி நிலையத்தில் விவசாய பொருட்களின் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பருத்தி நடவு திட்டம் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகப் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள டிராக்டர்கள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடி மத்திய அமைச்சர்கள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.