நாட்டையே உலுக்கிய கோவைக் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி சாதிக் என்ற டெய்லர் ராஜா 29 ஆண்டுகளுக்கு பின்பு தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷாவின் வலது கரமாக இருந்த டெய்லர் ராஜா சிக்கியது எப்படி ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
பிப்ரவரி 14, 1998…. கோவை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக தலைவர் எல்.கே. அத்வானி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தன.
அத்வானி பங்கேற்க இருந்த மேடைக்கு அருகே முதல் குண்டு வெடிக்கத் தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து 14 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டுகளைத் தயாரித்த 6 பேர் உட்பட 59 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகாயமடைந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் அடுத்தடுத்து 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
குண்டு வெடிப்பு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே மத்திய உள்துறை அலுவலகத்திலிருந்து வந்த எச்சரிக்கை ஒன்றில் இஸ்லாமியப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் அல் உம்மா இயக்கத்தினர் கோவையில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தும் அப்போதைய கருணாநிதி தலைமையிலான அரசு அலட்சியமாக இருந்ததன் விளைவே இத்தனை உயிர்கள் பறிபோனதற்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
கோவை குண்டுவெடிப்பு நடைபெற்ற இரண்டு மணிநேரத்திற்குள் அல் உம்மா இயக்கமும், அகில இந்திய ஜிஹாத் கமிட்டி இயக்கமும் மாநில அரசால் தடை செய்யப்பட்டது. அல் உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா மற்றும் அவருடன் இருந்த 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இஸ்லாமியப் பாதுகாப்புப் படை என்ற இயக்கத்தைச் சேர்ந்த அலி அப்துல்லா என்பவர் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்புகளிலும் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி பாஷாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதற்கிடையில் மற்றொரு முக்கிய குற்றவாளியான கோவை தெற்கு உக்கடம் பிலால் காலனியைச் சேர்ந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா தலைமறைவாகவே இருந்து வந்தார்
இந்த நிலையில் நீண்ட நாட்களாகச் சிக்காமல் இருக்கும் தீவிரவாதிகளை கண்டறியும் முயற்சியின் ஒருபகுதியாகத் தமிழகக் காவல்துறை, ஆப்ரேஷன் அறம் மற்றும் ஆப்ரேஷன் அகழி எனும் பெயரில் உளவுத்துறையின் மூலம் ரகசிய ஆப்ரேஷனை மேற்கொண்டது.
அதற்காக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவின் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளுடன் தொடர்புடைய அபுபக்கர் சித்திக்கை தமிழகக் காவல்துறை கைது செய்தது.
இளமைக்கால புகைப்படத்தை மட்டுமே கொண்டு நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்போடு ஆந்திரா மாநிலத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதி அபுபக்கரைப் பிடிக்க முற்பட்டபோது மற்றொரு பயங்கரவாதியான முகமது அலியும் சிக்கினார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் அல் உம்மா அமைப்பின் பயங்கராவதிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரையும் கைது செய்ய உதவியாக இருந்த ஆப்ரேசன் அறத்தின் தொடர்ச்சியாக ஆப்ரேசன் அகழி எனும் பெயரில் கோவைக் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சாதிக் என்ற டெய்லர் ராஜாவைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி அளித்த தகவலின் அடிப்படையில் கர்நாடக மாநிலம் விஜய்புராவில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவைத் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
1990களில் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய சாதிக் என்ற டெய்லர் ராஜா கோவையில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின் தலைமறைவானார். அல் உம்மா பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்கு முன்பு தையல் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு டெய்லர் ராஜா என்ற பெயரும் இருந்துள்ளது. அதோடு, ஷாஜகான் மஜீத் மகாண்டர், ஷாஜகான் சைக் எனும் பெயர்களைப் பயன்படுத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வெடிப்பு, ஜெயிலர் பூபாலன் கொலை என அடுத்தடுத்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷாவின் வலதுகரமாக வலம்வந்த டெய்லர் ராஜா கோவையிலேயே வீடு எடுத்துத் தங்கி அங்கேயே குண்டு வெடிப்புகளுக்குத் தேவையான வெடிகுண்டுகளைத் தயாரித்து விநியோகித்து வந்துள்ளார். வெடி மருந்துகளைக் கையாள்வதிலும், அதனை வெடிகுண்டாக தயாரிப்பதிலும் கைதேர்ந்தவரான சாதிக் என்ற டெய்லர் ராகா அதர்காக காஷ்மீர் வரை சென்று அங்குள்ள தீவிரவாத அமைப்புகளிடம் பயிற்சி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷாவின் வலதுகரமாக இருந்து கோவைக் குண்டு வெடிப்புக்குப் பின் தலைமறைவான டெய்லர் ராஜா, இரண்டாவது திருமணம் செய்து மூன்று குழந்தைகளுடன் கர்நாடகாவில் சுமார் 15 ஆண்டுகள் வசித்து வந்துள்ளார்.
தனக்கும் குண்டுவெடிப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததைப் போல விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்த டெய்லர் ராஜாவை, மத்திய உளவு அமைப்புகளின் உதவியோடு தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு கைது செய்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.