சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பேவர் பிளாக் சாலை அமைக்க 91 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், சாலை அமைக்காமல் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தாத்தியம்பட்டி ஊராட்சி செட்டியார் தெரு பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுவழிச் சாலையை அளவீடு செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, நில அளவையர் அளவீடு செய்தார்.
அப்போது பொது வழிச் சாலையில் பேவர் பிளாக் சாலை அமைக்க ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து 91 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதும், ஆனால் சாலை அமைக்காமல் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.