திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிப்பதாக வெளிவந்துள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மொட்டை வெயிலில் மொட்டை மாடியில் மாணவர்களை உட்கார வைப்பது நியாயமா? சுற்றுச்சுவர் கூட இல்லாத மொட்டை மாடியால் மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு நேராதா? அடிக்கும் வெயிலில் மாணவர்களின் உடல்நலம் என்ன ஆவது?வகுப்பறைகூட இல்லாத நிலைதான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா? பள்ளிக்கல்வித்துறைக்கு என வருடந்தோறும் ஒதுக்கப்படும் ₹40,000 கோடி ரூபாய் என்ன ஆனது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சொந்த விளம்பரத்திற்காகக் காட்டும் அக்கறையில் சிறிது கூட அரசுப் பள்ளி மாணவர்களின் மீது காட்ட முயற்சிக்காதது ஏன்? அரசுப் பள்ளியில் படிப்போர் ஏழை எளியோர் தானே, மழையோ வெயிலோ எங்கு வேண்டுமானாலும் உட்கார வைக்கலாம் என்ற அலட்சிய எண்ணம் கொண்டு செயல்படும் அறிவாலய அரசின் போக்கே அதனை அழிவுப் பாதைக்கு கூடிய விரைவில் இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.