திருப்பத்தூர் மாவட்டம் குமாரமங்கலத்தில், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
குமாரமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் பொதுநிதி விதிமுறைகளுக்கு முரணாக செலவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, காசோலையில் ஊராட்சி மன்ற தலைவர் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவைக் கண்டித்து, ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி தலைமையில் கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஊராட்சி மன்றத் தலைவர் முனிசாமி, முறைகேடு செலவினங்கள் தொடர்பாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் மரமொன்றை அகற்றிய விவகாரத்தில் நடவடிக்கை எடுத்ததற்கு பழிவாங்கும் விதமாக, எம்எல்ஏ வில்வநாதன் தூண்டுதலின் பேரிலேயே ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி குற்றஞ்சாட்டினார்.