உலக புராதன சின்னமாக விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் செஞ்சி கோட்டை கடந்த 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2024- 25ஆம் ஆண்டில் இந்தியாவில் செஞ்சி கோட்டை உட்பட 12 இடங்களை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பிற்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.
யுனெஸ்கோ அமைப்பினர் மற்றும் நினைவுச் சின்னங்களின் சர்வதேச ஆணைய உறுப்பினர்கள் செஞ்சி கோட்டையில் கடந்த ஆண்டு ஆய்வு நடத்தினர். இதனையடுத்து பாரீஸில் நடந்த உலக பாரம்பரியக் குழுவின் 47-ஆவது அமர்வில், மராத்தியர்கள் கட்டிய இந்தியாவின் 12 கோட்டைகளுக்கு அங்கீகாரம் அளித்து யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி மகாராஷ்டிராவில் 11, தமிழகத்தில் ஒன்று என மொத்தம் 12 சின்னங்களை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
விழுப்புரத்தில் உள்ள செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவிப்பதாகவும், செஞ்சி கோட்டைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம், சுற்றுலா மேம்பாடு, நிதி உதவி மற்றும் சட்டப்பூர்வ பாதுகாப்பு ஆகியவை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.