திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைகளை கையாடல் செய்து தப்பியோடிய சங்க செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலசப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். அவ்வாறு கடன் பெற்றவர்களில் சிலர், பணத்தை திருப்பிச் செலுத்திய பிறகு நகைகளை திரும்பக் கேட்டுள்ளனர். இதற்கு முறையாக பதிலளிக்காத அதிகாரிகள், விவசாயிகளை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நகைகளை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கையாடல் செய்து தப்பியோடியதை அறிந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இதற்கிடையே மத்திய வங்கியின் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது தங்கள் நகையை மீட்டு தரக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.