கோவை மாவட்டம் காடாம்பாடியில் மதுபானத்தை குடிக்கச் சொல்லி போதை இளைஞர்கள் தாக்கியதில் பள்ளி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி பயின்று வரும் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
அந்த வாகனத்தில் வந்த போதை இளைஞர்கள் சிலர், மாணவரை காடாம்பாடி விஐபி நகர் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்த மாணவரை மதுபானத்தை குடிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரும்பு ராடால் மாணவரின் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாணவர், போதை இளைஞர்களிடம் இருந்து தப்பி, அருகில் உள்ள சாலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள், மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அச்சத்தில் உள்ள பெற்றோர், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், குற்றச் சம்பவங்களுக்கு காரணமான டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.