ஆம்பூர் அருகே புதிய கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கருத்து தெரிவிக்க வந்த விவசாயிகளைக் காவல் உதவி ஆய்வாளர் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலத்தில் 6 கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வருவாய்க் கோட்டாட்சியர் அஜிதாபேகம் தலைமையில் ஆலாங்குப்பத்தில் நடைபெற்றது.
அப்போது, கல்குவாரி அமைப்பதற்கு எதிராகக் கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளைக் கருத்து தெரிவிக்கக் கூடாது எனக் கூறி, காவல் உதவி ஆய்வாளர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. புதிய கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
மேலும், கனிம வள கொள்ளை மற்றும் காவல்துறையின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தாவிட்டால் வருகின்ற தேர்தலில் திமுக அரசு தோல்வியைத் தழுவும் என்று அவர்கள் எச்சரித்தனர்.