உக்ரைன் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரடி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வரும் ரஷ்யாவின் போர்விமானங்களுக்கான உதிரி பாகங்களை அமெரிக்க நிறுவனங்களே வழங்கி வருகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே 24 மணிநேரத்தில் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு முடிவுக்குக் கொண்டுவருவதாக அதிபர் ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.
ஆனால் அதிபராகி பல மாதங்கள் ஆகியும், ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. உக்ரைனின் பாதுகாப்புக்கான அமெரிக்க செலவினங்களைக் கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், உக்ரைனுக்கான உதவிகளை நிறுத்தினார்.
ரஷ்யாவுக்கு ஆதரவாகப் பேசினார். வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த சில மாதங்களாக, ரஷ்ய அதிபர் புதின் மீதான அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார். மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
திடீரென்று, இப்போது, நேட்டோ வழியாக உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்று அறிவித்துள்ளார். நேட்டோவுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்கும். அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கும் நேட்டோ என்று கூறியுள்ள ட்ரம்ப், உக்ரைனுக்கு உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்ய இராணுவ வலிமைக்குப் பின்னால் அமெரிக்காவின் கைகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டாண்மை மற்றும் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணையம் (NAKO) இணைந்து வெளியிட்டுள்ள 84 பக்க அறிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இரட்டை வேடம் தெரிய வந்துள்ளது.
2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை நடத்தியது. தலைநகர் உட்பட உக்ரைனின் பெரும்பாலான நகரங்களில் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது.
இந்த வான்வழி போரின் முக்கிய அம்சமாகச் சுகோய் ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ரஷ்யாவின் சுகோய் ரக போர் விமானங்களின் தீவிரத் தாக்குதல்களால் உக்ரைன் பேரழிவைச் சந்தித்தது.
ரஷ்யாவின் சுகோய் -34 மற்றும் சுகோய் -35S போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ எலக்ட்ரானிக் கூறுகள் அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகளிலிருந்து வந்துள்ளன என்ற தகவலை ஆதார பூர்வமாக அந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட நூற்றுக்கணக்கான மைக்ரோ எலக்ட்ரானிக் கூறுகள் ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் சுகோய் -34 மற்றும் சுகோய் -35S போர் விமானங்களில் 141 மேற்கத்திய நிறுவனங்களிலிருந்து 1,100 க்கும் மேற்பட்ட மைக்ரோ எலக்ட்ரானிக் கூறுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த உதிரி பாகங்களில் பெரும்பாலானவை,Texas Instruments, Intel, Analog Devices,ON Semiconductor Corporation மற்றும் AMD உள்ளிட்ட பல அமெரிக்க உற்பத்தியாளர்களிடமிருந்து இறக்குமதி செய்யப் பட்டுள்ளன.
ஜப்பானின் Murata Manufacturing உட்பட ஜெர்மனி, தைவான், தென் கொரியாவில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்களிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியவுடன், அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்தன.
கடுமையான பொருளாதார தடையையும் மீறி, இந்த உதிரி பாகங்கள் எவ்வாறு ரஷ்யாவின் போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்டன என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.
உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகளைச் செய்யும் அமெரிக்கா, உக்ரைன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவின் போர் விமானங்களுக்கு அதிக சக்தியை வழங்கி இருப்பது, சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.