நீலகிரியில் விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் கட்டுமானங்கள் சட்டவிரோதச் செயல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் வகையில் மாஸ்டர் பிளான் எனும் பெருந்திட்டம் 1993ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
7 மீட்டர் உயரத்திற்கு மேலே கட்டடம் கட்டக் கூடாது எனப் பெருந்திட்டத்தில் விதிகள் வகுத்துள்ள நிலையில், பல அடுக்குமாடி கட்டடங்கள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுவருவதாகப் புகார் எழுந்துள்ளது.
வீடுகள் கட்டுகிறோம் எனும் பெயரில் அனுமதி வாங்கிவிட்டு தங்கும் வணிகரீதியாகக் கட்டுமானங்கள் கட்டுவதும், ஏற்கனவே உள்ள கட்டடங்களை விரிவாக்கம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசெண்ட் திவ்யா இருந்த போது அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை அதிரடியாகச் சீல்வைத்தார்.
அவரது பணியிட மாற்றத்திற்கு பின்பு சீல்வைக்கப்பட்ட கட்டடங்கள் படிப்படியாகச் சீல் அகற்றப்பட்டதோடு, புதியதாக விதிகளை மீறிக் கட்டுமானங்களுக்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் விதிமுறைகளுக்கு மாறாகக் கட்டப்படும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் சட்டவிரோதச் செயல்கள் அரங்கேறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரியின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களுக்குச் சீல் வைப்பதோடு, இனிவரும் காலங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டே கட்டுமானங்கள் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.