260 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா விமான விபத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.விமானம் பேரழிவில் சிக்கியதற்கான காரணம் அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்யப்பட் நிலையில், முதற்கட்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறது விமான விபத்து புலனாய்வு அமைப்பு…. என்ன நடந்தது பார்க்கலாம் விரிவாக….
நாட்டையை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் இந்திய விமானப் போக்குவரத்துத்துறை வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகவே பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 ரக விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில், மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் விழுந்து பயங்கரமாக வெடித்துச் சிதறியது.
விபத்துக்கான காரணம்குறித்து விசாரணையை விரைவுபடுத்துமாறு விமான விபத்து புலனாய்வு அமைப்புக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 8ம் தேதி விமான விபத்து புலனாய்வு அமைப்பு வழங்கிய 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில், இரண்டு என்ஜின்களின் இயக்கம் தடைபட்டு, என்ஜின்களின் வேகம் சட்டென குறைந்ததாகவும், என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் புறப்பட்ட சில நொடிகளில் ‘RUN’ நிலையிலிருந்து ‘CUTOFF’ நிலைக்கு மாறியதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரில் விமானிகளின் பதிவாகியிருந்த உரையாடலில், ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருளை ஏன் துண்டித்தீர்கள் என்று கேட்க, மற்றொரு விமானி நான் துண்டிக்கவில்லை என்று பதிலளித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமானிகள், எரிபொருள் சுவிட்சுகளை மீண்டும் இயக்கியபோது, என்ஜின் 1 தானாகவே மீண்டும் இயங்கிய நிலையில், 2-வது என்ஜினை இயக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானிகள் மேற்கொண்ட முயற்சியின்போது, விமானத்தில் மின்சாரம் தடைபட்டதால், அவசரகால மின்சக்தி ஆதாரமான ராம் ஏர் டர்பைன் தானாகவே செயல்பட தொடங்கியதாகவும், 180 நாட் வேகத்தைச் சிறிது நேரத்தில் எட்டிய விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த நிலையில், உடனடியாக உயர எழும்ப முடியாததால், விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. (SPL GFX OUT) தற்போது கிடைத்துள்ள அறிக்கையின்படி, விபத்துக்குக் காரணம் எரிபொருள் சுவிச் ஆஃப் செய்யப்பட்டதுதானென தெரிய வந்திருக்கிறது.
இது எப்படி CUTOFF ஆனது? விமானிகள் செயலா? அல்லது தானாக CUTOFF ஆனதா? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அடுத்தடுத்த விசாரணைக்குப் பின் கிடைக்கும் அறிக்கைகள்மூலம் உண்மையான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று போயிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.