அரக்கோணம் அருகே சரக்கு ரயிலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் அதிகாலை திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், சரக்கு ரயில் பெட்டிகளில் இருந்த எண்ணெய் தீப்பற்றி எரிந்து வருவதால், அப்பகுதி முழுவதுமே புகை மண்டலம் போல காட்சியளிக்கிறது. சரக்கு ரயிலில் இருந்த 54 பெட்டிகளில் 4 வேகன்கள் தீப்பற்றி எரிந்து வருகின்றன.
மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், பொதுமக்கள் அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அந்த பகுதியில் மின்சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை சென்டரலில் இருந்து புறப்படும் 10க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரக்கோணம் வழியாக சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டன. மேலும், ரயில் தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே விசாரணக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளான இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். தக்கோலம் பகுதியில் இருந்து, தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டோ அகிலேஷ் குமார் மற்றும் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் 60 பேர் கொண்ட இரு குழுக்கள், திருவள்ளூர் விரைந்தன.