பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மின் இழுவை ரயிலில் டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்ட மதுரை வீரன் என்பவருக்கும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் வழக்கறிஞரான பிரேமலதா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மலை அடிவாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் இதுதொடர்பாக இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவலாளி மதுரை வீரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட காவலாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பெண் வழக்கறிஞருக்கு ஆதரவாகவும், காவலாளியை கைது செய்யக்கோரியும் பழனி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையை அடுத்து, பெண் வழக்கறிஞர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோயில் பாதுகாவலரும் சிறையில் அடைக்கப்பட்டார். இருதரப்பினர் மீதும் போலீசார் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதால் மோதல் முடிவுக்கு வந்தது.