தஞ்சையில் 57 அடி உயர அங்காள முனிஸ்வரன் சிலை வைக்கப்பட்டுள்ள ஆலயத்திற்காக 27 அடி உயரம் கொண்ட அரிவாள் கிரேனில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தஞ்சை விளார் சாலையில், அப்பகுதி மக்கள் பங்களிப்புடன் 57 அடி உயர அங்காள முனிஸ்வரன் சிலையுடன் கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் முனிஸ்வரனின் வலது கையில் வைப்பதற்காக கும்பகோணத்தில் உள்ள சிற்பக் கூடத்தில் இருந்து 27 அடி உயரம், 3 அடி அகலத்தில் 216 கிலோ எடையில் பித்தளை முலாம் பூசப்பட்ட அரிவாள் செய்யப்பட்டுள்ளது. கிரேன் மூலம் கொண்டு வரப்பட்ட அரிவாளுக்கு கிராம எல்லையில் ஊர் மக்கள் சந்தனம் பூசி மஞ்சள், குங்குமம் இட்டு, மாலை சூடி சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர்.