கிழக்கு லடாக்கிலிருந்து சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் வரை உள்ள பிரச்சனைக்குரிய சீன- இந்திய எல்லைகளில் பாதுகாப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு தொடர்பான இந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பல ஆண்டுகளாகவே, அசல் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே, சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளைச் சீனா அமைத்து வருகிறது. தனக்குச் சாதகமாக எல்லைப் பகுதிகளை நிர்மாணித்துக் கொள்ள மேம்பட்ட உயர்தர சாலைகள் மற்றும் தனது இராணுவத் துருப்புக்களை இந்தியாவுக்கு எதிராக நிலைநிறுத்துவதற்கான பிற உள்கட்டமைப்பு வசதிகளை வேகமாக முன்னெடுத்து வருகிறது. சமயங்களில் எல்லை மீறி, எல்லையைத் தாண்டியும் நிலப்பரப்பைச் சொந்தம் கொண்டாட முயற்சி செய்து வருகிறது.
இதனை நன்கு அறிந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2016ம் ஆண்டில், எல்லை உள்கட்டமைப்புக்கான அதிகாரமளிக்கப்பட்ட குழு என்ற திட்டத்தில், ராணுவ அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் எல்லை மேலாண்மைத் துறையுடன் இணைந்து எல்லைப் பகுதிகளில் ஆய்வுகள் நடத்தி அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2027ம் ஆண்டுக்குள் சீன எல்லைக்கு அருகில் 1748 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை இந்தியா அமைக்கும் என்று 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா-திபெத்-சீனா-மியான்மர் எல்லைக்கு அருகில் சர்வதேச எல்லைக்கு 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த முக்கியமான “எல்லை நெடுஞ்சாலை” அமைக்கப்பட்டு வருகிறது.
எல்லைப் பகுதிகளில் ஊடுருவலைத் தடுக்க, போக்குவரத்து அமைச்சகம் NH-913 என்ற இருவழிச் சாலையைக் கட்டி வருகிறது. மேலும், எல்லைப் பகுதிகளுக்குப் பாதுகாப்புப் படைகள் விரைவாகச் செல்வதற்கும் மற்றும் ராணுவத் தளவாடங்களை எளிதில் கொண்டு செல்வதற்கும் இந்த எல்லை நெடுஞ்சாலை பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானப்படைத் தளத்துக்கான உள்கட்டமைப்பு, ஏவுகணைகளுக்கான வசதிகள் மற்றும் அசல் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள முக்கிய சாலை இணைப்புகள் உட்படக் கிழக்கு லடாக் முதல் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் வரை சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கியமான பாதுகாப்புத் திட்டங்களுக்கான முன்மொழிவுகளுக்குத் தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
லடாக்கில் உள்ள Karakoram காரகோரம் வனவிலங்கு சரணாலயம் மற்றும் (Changthang Cold Desert) சாங்தாங் குளிர் பாலைவன சரணாலயம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள (Dibang) திபாங் வனவிலங்கு சரணாலயம் மற்றும் சிக்கிமில் உள்ள (Pangolakha) பங்கோலாகா சரணாலயம் ஆகியவற்றில் இந்த திட்டங்கள் அமைந்துள்ளதால், வனவிலங்கு அனுமதி தேவைப்படுகிறது.
மியான்மர் எல்லைக்கு அருகில் நம்தாபா புலிகள் சரணாலயம் மற்றும் காரகோரம் சரணாலயங்கள், திபெத்திய மான், ஷாபோ, காட்டு யாக், பரல், பனிச்சிறுத்தை, இமயமலை சாம்பல் ஓநாய், லின்க்ஸ் மற்றும் மர்மோட் ஆகியவற்றின் தாயகமாகும். திபாங் சரணாலயம் சிறுத்தை மற்றும் புலியின் தாயகமாகும். பங்கோலாகா சரணாலயத்தில் ஆசியக் கருப்பு கரடி உள்ளிட்ட பலா அரிய விலங்குகள் வசித்து வருகின்றன.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்கான சுற்றுச் சூழல் விதிகளுக்கு உட்பட்டு, இந்தப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
பீரங்கி படைப்பிரிவின் துருப்புக்களுக்கு வீட்டுவசதி மற்றும் ஒரு கள மருத்துவமனை, உளவு மற்றும் கண்காணிப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை வைத்திருப்பதற்கான நிலையங்கள், Shyok ஷியோக்கில் விமான தளத்துக்கான உள்கட்டமைப்புக்கள் மற்றும் குறுகிய தூர தரை-வான் ஏவுகணைகளின் உபகரணங்களைக் கண்டறியும் தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கள் உருவாக்குதல் ஆகிய பாதுகாப்புத் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
Siachen சியாச்சின் பனிப்பாறையில் இராணுவ நடவடிக்கைகளுக்காக, Partapur பார்த்தாபூரில் உளவு மற்றும் கண்காணிப்பு விமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள படையினருக்குத் தங்குமிடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
(Daulat Beg Oldie) தௌலத் பெக் ஓல்டி என்பது சீனாவுடனான அசல் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LAC) அருகில் அமைந்துள்ள லடாக்கில் உள்ள முக்கியமான இந்திய ராணுவ புறக்காவல் நிலையமாகும். இது 17,000 அடி உயரத்தில், எல்லைப் பணியாளர் சந்திப்பு குடில் அருகிலேயே அமைந்துள்ளது. இது எல்லை தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க இருநாட்டு மூத்த ராணுவ அதிகாரிகளுக்கான சந்திப்பு இடமாகவும் செயல்படுகிறது.
இதன் அருகே, தனது பகுதியில், 18 மீட்டர் அகலமுள்ள தற்காலிக சந்திப்பு இடத்துக்கு இடையே ஒரு கான்கிரீட் சாலையைச் சீனா அமைத்து வருகிறது. இந்தியப் பகுதியில் தௌலத் பெக் ஓல்டி முதல் எல்லைப் பணியாளர் சந்திப்பு குடில் வரையிலான 10.26 கிலோமீட்டர் வரை இதுவரை எந்த சாலை வசதியும் இல்லாமல் இருந்தது. இந்திய ராணுவம் மற்றும் இந்திய- திபெத் எல்லைக் காவல் படையினர் அடிக்கடி வந்து செல்லும் இந்த பகுதிக்கான சாலை இணைப்பும், அவற்றுக்கு இடையே எந்த சாலையும் இல்லை.
தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு ஒப்புதல் அளித்த 30க்கும் மேற்பட்ட பாதுகாப்புத் திட்டங்களில் 26க்கும் மேற்பட்டவை லடாக்கில் அமைந்துள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.