விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ… இந்தியா முழுவதும் மராட்டியர்கள் கட்டிய 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டைக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இயற்கை அரணாக அமைந்த மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள், நீண்ட மதில் சுவர்கள் என இன்றும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது நம் செஞ்சிக்கோட்டை.
தமிழர் கட்டிடக்கலை, போர்திறன், அரசியல், கலாச்சார ஒற்றுமையின் முக்கிய சான்றாகத் திகழும் செஞ்சிக்கோட்டை, கிழக்கின் ட்ராய் என்றும், உட்புக முடியாத கோட்டை இந்தியாவிலேயே பழமையான, வலுவான கோட்டைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட செஞ்சிக்கோட்டை தற்போதும் வீரம் மங்காமல் காட்சியளித்து வருகிறது.
13ஆம் நூற்றாண்டில் இடையர் குலத்தைச் சேர்ந்த ஆனந்த கோன் என்பவரால் முதன்முதலில் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டை, மஹால், தானியக் களஞ்சியம், சிறைச்சாலை, படையினர் பயிற்சிக்கூடம், கோயில்கள், பள்ளிவாசல், அகழிகள், கணவாய் போன்றவற்றுடன் நிமிர்ந்து நிற்கிறது.
விஜயநகரப்பேரரசு, செஞ்சி நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான், பேரரசர் சிவாஜி, மொகலாயர்கள், ஆற்காடு நவாப் என அடுத்தடுத்து கைமாறிய செஞ்சிக்கோட்டை, இறுதியில் 1799ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது.
தற்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையை மத்திய அரசின் பரிந்துரைப்படி, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. பாரீஸில் நடந்த உலக பாரம்பரியக் குழுவின் 47-ஆவது அமர்வில், மராட்டியர்கள் கட்டிய இந்தியாவின் 12 கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டையும் உலக பாரம்பரிய சின்னமான அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை வரிசையில் ஆறாவதாக செஞ்சிக்கோட்டையும் இணைந்துள்ளது.