ஐரோப்பிய நாடுகளைச் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தகிக்கும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருவது ஐரோப்பிய நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.
வரலாறு காணாத வெப்பம்… அனலைக் கக்கும் வெயில் என ஐரோப்பிய நாடுகளைக் கலங்க வைத்துள்ளது கோடைக்காலம்.
பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி பின்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 105 டிகிரி பாரன்ஹீட் சுட்டெரித்த நிலையில், மார்ஷல் நகரில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. கடுமையான வெப்பம், வறட்சி போன்றவை காட்டுத் தீவிக்குத் தீனி போட்டதால் அது வனத்தையே கபளீகரம் செய்தது.
போர்ச்சுகலில் உள்ள மோரா நகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 138 டிகிரி பாரன்ஹீட் பதிவான வெப்பம் மக்கள் பரிதவிக்க வைத்துள்ளது. இதுதான் ஐரோப்பாவில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெப்பம், அனல் காற்று போன்றவற்றால் ஐரோப்பிய மகள் பகல் நேரங்களில் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அவசரக் கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் காலை 11 மணி முதல் 6 மணி வரை வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் மெட்டியோ, ஜெர்மனி நாட்டின் முனிச் போன்ற நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வெப்பத்தின் தாக்கத்தினாலும், பல்வேறு உடல் உபாதைகளாலும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டாயிரத்து 300 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
புவி வெப்பமயமாதல், தொழில்மயமாக்கல், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவை பருவநிலை மாற்றத்திற்கு வித்திடுவதால், அது வெப்ப அலைகள் தீவிரமடைவதற்கு வழிவகுத்து விடுவதாகக் கூறும் ஆய்வாளர்கள், உலக நாடுகள் இயற்கையைக் காப்பதற்கான முன்னெடுப்புகளைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.