மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவுக்குத் தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா இசையமைத்து மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற சிவ ராத்திரி பாடல், நடிகை வனிதா விஜய்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாகக் கூறி, இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென நடிகை வனிதா விஜயகுமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து, மனுவுக்குத் தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
















