திருவள்ளூர் அருகே தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயில், எஞ்சிய டேங்கர்களுடன் மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றது.
திருவள்ளூர் – ஏகாட்டூர் ரயில் நிலையம் இடையே பெரியகுப்பம் பகுதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
மணலி ஐஓசிஎல் நிறுவனத்திலிருந்து மைசூருக்கு எரிபொருள் கொண்டு சென்றபோது விபத்துக்குள்ளான 52 டேங்கர்கள் கொண்ட சரக்கு ரயிலின் 17 டேங்கர்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்தில் இருந்து தப்பிய எரிப்பொருள் நிரப்பப்பட்ட 34 டேங்கர்கள் திருவள்ளூர் ரயில்வே யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தீ விபத்தில் இருந்து தப்பிய எஞ்சிய 34 டேங்கர்களுடன் சரக்கு ரயில் மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றது.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரதாப், தண்டாவளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகச் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்தார்.
மேலும், விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள தண்டவாளங்கள் தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டதா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.