காப்புரிமை விவகாரம் தொடர்பான வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய இளையராஜாவின் மனு வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாடல் உரிமைகள் மற்றும் ராயல்டிகள் தொடர்பான பதிப்புரிமை ஒப்பந்தங்களை மீறியதாகக் கூறி இளையராஜாவின் நிறுவனத்திடமிருந்து ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி இளையராஜா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காப்புரிமை தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவை அவ்வரச வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் இளையராஜா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இளையராஜாவின் வழக்கு வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.