காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – ஈரோடு சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரே மணி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
அவரது கடையில் ஆய்வு மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் கபில்தேவ், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி மணியின் மகன் கோகுலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தார்.
கோகுலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த நிலையில், உதவி ஆய்வாளர் கபில்தேவ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக் காவல் ஆய்வாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், உதவி ஆய்வாளர் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அவரது மகன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு கல்லூரி அருகே 700 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், அதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் கபில்தேவ், அதிகார துஷ்பிரயோத்தில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.