இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது. காக்பிட்டில் எரிபொருள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. ஏன் ஆஃப் செய்யப்பட்டது? யார் ஆஃப் செய்தது? போன்ற பல்வேறு கேள்விகளை இந்த விசாரணை அறிக்கை எழுப்பியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஜூன் 12ம் தேதி, ஏர் இந்தியா விமானம், அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டது. 11 ஆண்டுகள் பழமையான இந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட 40 வினாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அகமதாபாத் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதி வெடித்துச் சிதறியதில், மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்து, இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான , குழப்பான விமான விபத்துக்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. இந்த விபத்து குறித்து Aircraft Accident Investigation Bureau எனப்படும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. ஏஏஐபி-ன் இயக்குநர் ஜெனரல் தலைமையில் நடைபெறும் இந்த விசாரணைக் குழுவில் இந்திய விமானப் படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், அமெரிக்கத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 15 பக்கம் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் ஓடுபாதையில் வேகத்தை அதிகரித்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்டு 58 வினாடிகள் கழித்து வானில் ஏறியது.
காற்றில் மிதக்கத் தொடங்கி, மூன்று வினாடிகளுக்குப் பிறகு, விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களும் CUT-OFF நிலைக்கு மாறியதால் என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்று, இரண்டு என்ஜின்களும் முழுமையாகச் செயல் இழந்தது என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, விமானம் தரை இறங்கிய பிறகே, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் CUT-OFF நிலைக்கு மாற்றப்படும். கூடுதலாக, CVR எனப்படும் காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம், ஏன் CUT-OFF செய்தாய் என்று கேட்க, அதற்கு மற்றவர் நான் செய்யவில்லை என்றும் பதிலளிப்பதும் பதிவாகி உள்ளது. விமானம் புறப்படும் நேரத்தில், துணை விமானி விமானத்தை இயக்க, கேப்டன் கண்காணித்துக் கொண்டிருந்தார்.
உடனடியாக, RUN நிலைக்கு சுவிட்ச் நகர்த்தப்பட்டதைக் கருப்புப் பெட்டியில் பதிவான தரவுகள் தெரிவிக்கின்றன. பத்து வினாடிகள் கழித்து, ஒரு சுவிட்சும், அடுத்த நான்கு வினாடிகளில் மற்றொரு சுவிட்சும் RUN நிலைக்கு மாற்றப்பட்டன.
இதன் மூலம் விமானிகள் என்ஜின்களின் வேகத்தை மீட்டெடுக்க முயற்சித்தது தெளிவாகியுள்ளது. எரிபொருள் மீண்டும் இயக்கப்பட்ட பதின்மூன்று வினாடிகளுக்குப் பிறகு, விமானி மேடே சிக்னல் அனுப்பியுள்ளார். வானில் ஏறிய 32 வினாடிகளுக்குப் பிறகு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஏன் சுவிட்ச்கள் CUT-OFF நிலைக்கு மாறின என்பது பற்றியும், குரல்பதிவில் யார் கேள்வி கேட்டது? யார் பதில் அளித்தது என்பது பற்றியும், விபத்துக்கான காரணம் குறித்தும் முதல்கட்ட அறிக்கை எந்த முடிவுகளையும் தெரிவிக்கவில்லை.
அறிக்கையின்படி, என்ஜினுக்கு எரிபொருள் போகவில்லை. அதற்கு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் CUT-OFF ஆனது தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. எப்படி CUT-OFF ஆனது? இதை விமானிகள் செய்தார்களா? எந்த விமானி செய்தார் ? அல்லது வேறு யாராவது செய்தார்களா? யார் அவர்கள் ? அல்லது அல்லது விமானத்தின் மின்னணு கட்டுப்பாட்டு அலகில் ஏற்பட்ட பிரச்சனையால் இரண்டு சுவிட்ச்களும் தானாக CUT-OFF ஆனதா? என்பது குறித்து கேள்விகளும் எழுந்துள்ளன.
2018ம் ஆண்டு டிசம்பரில், அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் ஒரு சிறப்பு விமானத் தகுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சில போயிங் 737 விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களில் LOCK செய்யும் அம்சம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
அதாவது, எரிபொருள் சுவிட்ச்கள் விமானி இல்லாமல் RUN மற்றும் CUT-OFF நிலைகளுக்கு இடையே தானாகவே நகரக்கூடும் என்று எச்சரித்திருந்தது. இந்தப் பிரச்சனை உள்ளது எனக் குறிப்பிடப் பட்டாலும் இது பாதுகாப்பற்ற நிலையாகக் கருதப்படவில்லை.
விமான விபத்துக்கு நாசவேலை காரணமாக இருப்பதற்கான உடனடி ஆதாரங்கள் எதுவும் இதுவரை இப்போதைக்கு இல்லை. வானம் தெளிவாக இருந்தது. அதிகமாகக் காற்றும் இல்லை. வானிலை பிரச்சினைகளும் இருக்கவில்லை. விமானிகள் ஆரோக்கியமும் தகுதியும் போதிய அனுபவமும் கொண்டவர்கள். தேவையான ஓய்வுக்குப் பிறகே விமானிகள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர் என்று முதற்கட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏர் இந்திய விமான விபத்துக்கான உண்மையான காரணம் என்ன? அந்த 10 வினாடிகள் மர்மம் என்ன ? என்பது தொடர் விசாரணையில் தெரிய வரலாம்.