பழம்பெரும் நடிகை சரோஜா தேவி பெங்களூருவில் காலமானார். அவரது திரைப்பயணம் குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்…!
அபிநய சரஸ்வதி… கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார். கதாசிரியர் சின்ன அண்ணாமலை ‘சாவித்ரி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றைத் தொடங்கினார்.
அதன் நாயகன் எம்.ஜி.ஆர். நாயகி பாத்திரத்துக்கு யாரைப் போடலாம் என பேச்சு வந்த போது “பத்மினி சரியாக இருப்பார்” என்றார் கவியரசர் கண்ணதாசனின் அண்ணனும் படத்தின் பைனான்சியருமான ஏ.எல்.சீனிவாசன்.
ஆனால் பத்மினியின் கால்ஷீட் இல்லாததாலும் விரைவில் படத்தை முடிக்க வேண்டும் என்பதாலும் புதுமுகத்தை நடிக்க வைக்கலாம் என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதன்படி சரோஜா தேவிக்கு மேக்அப் டெஸ்ட் எடுத்தார்கள். ஆயிரம் அடிக்குப் படமாக்கப்பட்ட காட்சிகளைத் திரும்பத்திரும்ப பார்த்த எம்.ஜி.ஆர். நீண்ட யோசனைக்குப் பிறகு ஒப்புதல் கொடுத்தார்.
அந்த நேரத்தில் தமது சொந்தப்படமான ‘நாடோடி மன்னனிலும்’ கவனம் செலுத்தி வந்த எம்.ஜி.ஆர். அதற்காக மற்ற பட வேலைகளை நிறுத்திவைத்தார். இந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பானுமதி ‘நாடோடி மன்னனில்’ இருந்து விலகிக் கொண்டார். அதை சரோஜா தேவியின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
‘நாடோடி மன்னன்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பாகப்பிரிவினை’ என அடுத்தடுத்து வெள்ளி விழா படங்களில் நடித்ததால் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார் சரோஜா தேவி. அதன் விளைவாக ஒரே நாளில் 30 படங்கள் BOOK ஆகும் அளவுக்கு வளர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ராப்பகலாக நடித்தார்.
சரோஜா தேவியின் நடிப்பாற்றலுக்கு முழு தீனி போட்ட படமாக அமைந்தது ‘பாலும் பழமும்’. அதில் ‘நர்ஸ் சாந்தியாகவே’ வாழ்ந்திருந்தார் சரோ. அந்தப் படத்தில் சிவாஜியின் நடிப்புக்குச் சமமாகப் பேசப்பட்டது சரோஜா தேவியின் நடிப்பு.