நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், சார் பதிவாளர் அலுவலகத்தில் தடங்கல் மனு அளித்தும், தனக்கு தெரியாமல் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை கிரையம் செய்துள்ளதாகக் கோவையைச் சேர்ந்த உணவக உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் உணவகத்தின் உரிமையாளர் கோதண்டராமன் என்பவர், கொரோனா காலத்தில் ஏற்பட்ட வியாபார இழப்பால், தனது ஆடிட்டர் மூலம் உமா என்பவரிடம் இரண்டரை கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
ஆடிட்டர் மீதான நம்பிக்கையில் சொத்து ஆவணத்தை கிரையம் செய்து கோதண்டராமன் கடன் பெற்ற நிலையில், அந்த சொத்து ஆவணத்தைத் தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து 7 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
கடனை திரும்ப செலுத்தாதததால் கோதண்டராமனுக்கு நிதி நிறுவனம் ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக கோதண்டராமன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன், சார்பதிவாளர் அலுவலகத்தில் தடங்கல் மனுவையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தன்னை ஏமாற்றி சொத்தை வேறு நபர்களுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளதாக கூறி கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் கோதண்டராமன் புகார் அளித்துள்ளார்.
தனக்கு தெரியால் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை கிரையம் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், தடங்கல் மனு அளித்திருந்த நிலையில் சொத்து எப்படி கிரையம் செய்யப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.