நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்து விட்டோம் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷாவுக்கு கடந்த 2017இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு 8 கோடியே 60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் நிமிஷா தயார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில், தற்போது ஏமன், ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு செயல்படுவதற்கான வழிகள் குறைவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
உலகின் மற்ற நாடுகளைப் போன்று ஏமன் இல்லை என்றும், அங்கு அரசு நேரடியாகத் தலையிடுவதற்கான வழிகள் மிகவும் சிக்கலானவை எனவும் கூறப்பட்டது.
மரண தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்துச் சம்பந்தப்பட்ட பகுதியின் அரசு வழக்குரைஞருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஏமன் அரசு தெரிவித்துள்ளது.