திருச்சி சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு உரியத் தீர்வு கோரி இலங்கைத் தமிழர்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 70-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் உட்பட வங்கதேசம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான நவநாதன் என்பவர், 2009-ம் ஆண்டு நடந்த இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உரியத் தீர்வு கோரி கடந்த 5-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக சுகந்தன் என்ற மற்றொரு இலங்கைத் தமிழரும் கடந்த 12-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர்களுடன் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
இந்நிலையில், இனப்படுகொலைக்குத் தீர்வு கிட்டும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும், தொப்புள்கொடி உறவுகள் அனைவரும் தங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர்கள் கடிதம் வாயிலாக ஆதரவு கோரியுள்ளனர்.