நெல்லை அருகே சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீசார் பொய் வழக்குப் பதிந்ததாகக் கூறி உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புது கிராமத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை மாற்றுச் சமூக இளைஞர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் காவல் துறையினர் மறுத்து விட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
மாறாகப் பாதிக்கப்பட்டவர்கள் மீதே காவல் துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.