திருவள்ளூர் அருகே இருளர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அவரை தூக்கிச் சென்ற நபர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்.
தொடர்ந்து அந்த நபர் தனது நண்பரை தொடர்பு கொண்டு இந்தியில் பேசியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பிய சிறுமி, வீட்டிற்கு வந்துள்ளார். நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடல்நலம் பாதித்த சிறுமியை தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்து 5 நாட்களுக்கு மேலாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, சாலையில் நடந்து சென்ற சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.