மதுரையில் ஐடிஐ மாணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், இளமனூர் பகுதியில் உள்ள கண்மாய் கரையில் பாதி எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், உயிரிழந்த நபர் ஒத்தக்கடையைச் சேர்ந்த 17 வயதான பிரசன்னா என்பவரும், அவர் ஐடிஐயில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், மாணவர் கொலை தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சீனியர் மாணவர்களான ராமர், அபினேஷ் ஆகியோர் சரணடைந்தனர். மேலும், கொலை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களான தாமோதரன், அசோக் பாண்டியர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து கைதான 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சீனியர் மாணவர் ராமரை சில நாட்களுக்கு முன்பு யாரோ தாக்கியதாகவும், அது பிரசன்னா என நினைத்து அவருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரசன்னாவின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததுடன், உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.