காமராஜரின் புகழுக்குக் களங்கும் விளைவிக்கும் வகையில் திருச்சி சிவாவின் பேச்சு உள்ளதாகவும், திமுகவின் வரலாற்றுத் திரிபுக்கு ஒரு அளவே இல்லையா எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.
காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிபுக்கு ஒரு அளவே இல்லையா? என்றும் கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிசாமி, பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண் என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது திமுக தானே? என்றும், காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலைச் செய்வது திமுக தானே? என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இவரே வெடிகுண்டு வைப்பாராம்.. இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க ஸ்டாலின் என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினாலோ, திமுகவின் அடிப்பொடிகளாலோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.