எதிர்மறை விமர்சனங்களால் புதிய திரைப்படங்கள் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், தியேட்டர்களில் யூடியூபர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஷால். பெரும்பாலானோர் விமர்சனங்களைப் பார்த்து திரையரங்கத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், விஷாலின் பேட்டி யூடியூபர்களிடையே எதிர்ப்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமா எதிர்மறை விமர்சனங்களால் பெரும் பிரச்சனையைச் சந்தித்து வரும் நிலையில், உள்நோக்கத்துடன் செய்யப்படும் விமர்சனங்கள், திரைப்படத்தின் முதல்வார வசூலை பாதாளத்தில் தள்ளிவிடுகிறது என்பது 96 இயக்குநர் பிரேம்குமாரின் கருத்து.
எதிர்மறை விமர்சனத்தால் வசூல் ரீதியாக பாதிக்கப்பட்ட படங்களில் கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படமும் ஒன்று. சொந்த ஊர், உறவுகள் பற்றிய திகட்டாத நினைவுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த இப்படம் ஓடிடியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு தியேட்டருக்குள் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்கிறார் நடிகர் விஷால். சென்னையில் ரெட் பிளவர் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய விஷால், இனிமேல் புதிய திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகும்போது, முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் பப்ளிக் ரிவ்யூ எடுக்க திரையரங்கத்துக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகும் நிலையில், எந்த படத்துக்கும் சரியான அளவில் தியேட்டர் கிடைப்பதில்லை என்று கூறிய விஷால், பட வெளியீட்டை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், விஷாலின் இந்த போட்டி பப்ளிக் ரிவ்யூ செய்யும் சினிமா விமர்சகர்களிடம் எதிர்ப்பை பெற்றுள்ளது.