இந்தியாவுடனான மினி வர்த்தக ஒப்பந்தம் தயாராகி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க பால் இறக்குமதிக்குக் கண்டிப்பாக அனுமதி இல்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக நிற்கிறது. அதனாலேயே, இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் கால தாமதம் ஆகிறது. ஏன் இந்தியா பால் இறக்குமதியில் பிடிவாதமாக உள்ளது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்துகிறது. பால் உற்பத்தியில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 சதவீதத்துக்கும் அதிகமாகும். உலகிலேயே இந்தியாவில் தான் 30-கோடிக்கும் அதிகமான் பசுக்கள் உள்ளன. சுமார் 187 மில்லியன் டன்களுக்கும் அதிகமான பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. .
இந்தியாவின் பால்வளத் துறை மிகவும் நம்பிக்கைக்குரிய துறைகளில் ஒன்றாகும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதுடன், சைவ உணவு முறையை நோக்கிச் செல்லும் இந்தியர்களின் புரதத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
இந்தியாவில் பால்வளம் மிகப்பெரிய விவசாயப் பொருளாகும். இது தேசிய பொருளாதாரத்தில் 5 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. மேலும், 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. சுமார் 1.4 பில்லியனுக்கும் அதிகமான இந்திய மக்களுக்கு உணவளிக்கிறது.
இந்தியாவின் பால் உற்பத்தியில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே நுகரப்படுகிறது. மிகக் குறைந்த அளவு பால் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் பால் சந்தை உலகின் மிகப்பெரிய சந்தையாகும். நீண்ட காலமாகவே 16.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இந்தியப் பால் சந்தையில் நுழைய அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ஆண்டுக்கு 239 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு மேல் பால் உற்பத்தி செய்யும் அமெரிக்கா, தனது வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களை இந்தியாவில் விற்க விரும்புகிறது.
தற்போது, முக்கிய பால் இறக்குமதிகளுக்கு 60 சதவீதம் வரை இந்தியா வரி விதிக்கிறது. மேலும், இந்திய வீடுகளுக்குள் நுழையும் பால், இறைச்சி, இரத்தம் போன்றவற்றை ஒருபோதும் உண்ணாத பசுக்களிடமிருந்து வருகிறது என்பதற்கான உறுதி சான்றிதழைக் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கட்டாயமாகியுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு விதிகள் குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. ஏனெனில், அமெரிக்கப் பண்ணைகளில் பசுக்களுக்கு பொதுவாகக் கோழி எச்சங்கள், மீன் உணவு மற்றும் விலங்குகளின் இறைச்சிகளே உணவாக அளிக்கப்படுகின்றன.
“அசைவ பால்” கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களுக்கு, குறிப்பாகச் சைவ உணவு உண்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. பால் பொருட்களை ஊட்டச்சத்து மற்றும் சடங்கு என்று இந்தியர்களால் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வழிபாட்டின் போது தெய்வத்துக்கு அபிஷேகப் பொருளாகப் பால் பயன்படுத்தப்படுகிறது. இந்து மத யாக வேள்விகளில் நெய் ஊற்றப்படுகிறது. பன்றிக் கொழுப்பு அல்லது கோழி எச்சங்களைப் பசுக்களுக்கு உணவாகக் கொடுக்கும் வழக்கம், உணவு எல்லைகளையும் மத பண்பாட்டு நம்பிக்கைகளின் வரம்புகளை மீறுகிறது.
அமெரிக்கக் கால்நடை தீவனத்தில் பன்றிகள், குதிரைகள் மற்றும் கோழிகளின் எச்சங்கள், இறைச்சிகள் பசுக்களுக்கு உணவாக சட்டப்பூர்வமாகச் சேர்க்கப்படுகிறது என்பதை சியாட்டில் டைம்ஸ் விசாரணை அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. உலக வர்த்தக அமைப்பில் “அறிவியல் ரீதியான தடையல்ல” என்று அமெரிக்கா வாதிட்டாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, இது அறிவியலைப் பற்றியது அல்ல, மாறாக நம்பிக்கையைப் பற்றியதாகும்.
இப்போது நடைபெற்றுவரும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா தங்கள் நாட்டு வேளாண் பொருட்கள்,பால் பொருட்கள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு இந்தியச் சந்தையில் அனுமதி தரவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
அமெரிக்கப் பால் பொருட்களுக்கு இந்தியச் சந்தை திறக்கப்பட்டால், நாட்டின் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்று sbi வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது, இந்தியாவின் பால் விலை 16 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும்,அதனால்,கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில், நாட்டின் பால் துறையை விட்டுக் கொடுக்காமல் இந்தியா பாதுகாத்துள்ளது. அமெரிக்காவுடனும் இந்தியா அதே நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பால்-பொருளாதாரம் மட்டும் அல்ல. அதற்கும் மேல் தேசத்தின் பண்பாடு, வாழ்வியல், நம்பிக்கை மற்றும் புனிதமான பாரம்பரியம் ஆகும்.